Monday, 8 December 2014

நான் வியக்கும் மனிதர்கள்


”பாட்டிகள்’’ சரியாகப் படிக்கவும் “பார்டிகள்’ அல்ல பாட்டிகள்.சென்னையில் இன்று ஒன்றல்ல இரண்டு பெரிய நிகழ்வுகள் நடந்து முடிந்திருக்கின்றன, அப்படி இருக்கையில் நான் ஏன் இந்த தலைப்பை எடுத்திருக்கிறேன் என்று உங்களுக்கு தோன்றுவது நியாயம் தான். 

 காலையில் வழக்கத்திற்கு மாறாக சீக்கிரமாகவே எழுந்து மெரினாக் கடற்கரை வழியாக செல்லும் மாரத்தான் ஒட்டத்தை காணச் சென்றேன். இது வரை நான் மாரத்தான் பார்த்ததே இல்லை.சாலையின் ஒரு பாதியை மாரதான் ஒட்டத்திற்காக மறித்து வைத்திருந்தனர்.எனவே சாலையின் நடுவில் நின்று கூட்டம் கூட்ட்மாக ஒடிக்கொண்டு இருந்தவர்களை வேடிக்கைப் பார்த்தப்படி இருந்தேன். அந்தப் பக்கமாக வந்த 25g பேருந்தில் இருந்து ஒரு பாட்டி அவசரம் அவசரமாக இறங்கினார். எப்படிச் சாலையை கடப்பது என்று சற்றேக் குழப்பத்தில் காத்திருந்த எங்களை சற்றும் பொருட்படுத்தாமல் தள்ளிவிட்டு ஒட்டமும் நடையுமாக கடந்துச் சென்றார். சாலையில் நடந்த மாரதான் ஒட்டத்தை விட இந்தப் பாட்டியின் ஒட்டம் என்னைக் கவரவே அவரை பின் தொடர்ந்தேன். அந்த பாட்டி தன் டீக் கடையை திறக்கத் தான் ஒடினார் என்பதை பின் தொடர்ந்ததில் புரிந்துக் கொண்டேன். வியக்க வைக்கும் வேகம் “எவன் மாராதான் ஒடினால் எனக்கு என்ன டா… நான் டீ  போடணும்” என்ற அவரது வாழ்க்கை ஒட்டம். ஆச்சரியமான மனுஷி!

இந்த பாட்டியின் தாக்கம் நான் இது வரை கடந்து வந்த சில சூப்பர் பாட்டிகளை நினைவுபடுத்தியது.
தினமும் பேருந்திலிருந்து இறங்கி சிறிது தூரம் நடக்க வேண்டி இருக்கும். பஸ் நிறுத்ததைத் தாண்டி சப்வேவில் இறங்கிய மாத்திரத்தில் வடை வாசனை மூக்கைத் துளைக்கும். அந்த தெருவின் முனையில் ஒரு பாட்டி கெரசின் அடுப்புடன் அமர்ந்திருப்பார். உருவம் என்னவோ காற்று அடித்தால் கூட வலிக்குமோ என்பதைப் போல முதுமை புகுந்த மெலிந்த உடல். ஆனால் பெரிய சோடாப் புட்டி ஒன்றை மாட்டிக்கொண்டு வடைகளை பொன்னிறமாக எடுத்து வைத்தப்படி இருப்பார்.
 பாட்டியின் பருப்பு வடைச் சுவையை எந்த பவன்களும் இன்று வரை மிஞ்சிட வில்லை. கார் ஐ நிறுத்தி வடை வாங்கிச் செல்பவர்களையும் கூடப் பார்த்திருக்கிறேன். ஆனால் வடையின் விலை மட்டும் மாறியதே இல்லை 5 ரூபாய்க்கு இரண்டு. 

இவர் வீட்டுக்கு அருகில் என்றால், வீட்டிற்கே வந்து மிரட்டிக் கீரையை விற்று விட்டுப் போகும் இன்னொருப் பாட்டியோ இவருக்கு கொஞ்சமும் சளைத்தவர் இல்லை.அம்மா வாடிக்கையாக கீரை வாங்குவது உண்டு தான் என்றாலும் அந்த கீரை இதற்கு நல்லது இந்த் கீரை அதற்கு நல்லது என்று எதாவதுக் கூறி இரண்டு கட்டு கீரை ஆவது விற்று விட்டு தான் படி இறங்குவார். கீரை நல்லது தான் என்று ஊருக்கேத் தெரிந்தாலும் எவனும் சமைப்பதில்லை. காரணம் வேகமாக ஓடும் உலகத்தில் கீரையை வாங்கி , இலைகளை உருவி, சுத்தம் செய்து, கடைவதற்கு நமதுச் சோம்பேறித்தனம் அனுமதிப்பதில்லை. அதற்கு எற்ப த்தானும் மாறிக் கொண்டு, இன்று டை( tie) அணிந்துக் கொண்டு வலம் வரும் மார்கெடிங் வாலிபர்களையெல்லாம் ஒரு நிமிடப் பேச்சில் விழுங்கிவிடுவார் எங்கள் காலனி கீரைப் பாட்டி.

நான் இது வரைப் பேருந்துகளில் மட்டுமே பார்க்கும் பாட்டிகளும் சூப்பர் பாட்டிகள் பட்டியலில் இருக்கிறார்கள். ஒரு ஆணையும் உட்கார விடாமல் அராஜகம் செய்யும் சில நடுத்தர வயதுப் பெண்களை நீங்களும் பார்த்திருக்க கூடும். கால் உள்ள மனிதருக்கெல்லாம் கால் வலியும் உண்டு என்பதை ஏனோ பெண் உரிமை என்ற முகமூடிக்குப் பின்னால் மறைத்து விடுகிறார்கள் அவர்கள். ஆனால் சில பாட்டிகள் மட்டும் கம்பியைப் பிடித்து கன் மாதிரி நிற்பார்கள்.வயது 60 ஐ தாண்டி இருக்கும் எனினும் கையில் கூடைகளுடன் டாண் என்று 8 மணிக்கு பேருந்தில் அஜார் ஆவார்கள். மீன் வியாபாரம் செய்பவர்கள் என்பது எனது அனுமானம்.   கண்டக்டர்களுக்குப் பிரியமான இந்த சூப்பர் பாட்டிகள்,அவரை நலம் விசாரிக்கத் தவறியதே இல்லை. சில்லரை இல்லை என்றால் நாளைக்குக் கட்டணத்தை வாங்கிக் கொள்கிறேன் என்று விடைப் பெறுவதையும் பார்க்க கூடும்.ஆனால் அவர்கள் இருக்கையில் இருப்பவரை எழுப்பி ஒரு போதும் நான் பார்த்ததே இல்லை.தானாக வந்து இடம் அளிக்கும் நபர்களிடமும், எங்க இறங்கணும் என்று கேட்டுக் கொண்டு, நிறைய நிறுத்தங்கள் தள்ளி இருந்தால் அமர்வது இல்லை இவர்கள்.  சொல்ல மறந்து விட்டேன் இவர்கள் இருவரும் டீனேஜ் நண்பர்களைப் போல பேசி சிரித்தவாறு வேலைக்குச் செல்லும் அழகே தனி! தனியே பாட்டு கேட்டப்படி போகும் நான், அவர்கள் ஏறியதும் பாட்டை நிறுத்தி விட்டு அவர்கள் வாய் பார்த்தது தான் அதிகம்.

சென்னையின் உழைக்கும் வர்க்கம் என்று பெரும்பாலும் இளைஞர்களே சித்தரிக்கப் படுவதை காண இயலும். வயதால் மட்டுமே இளைஞர்கள் அல்லாத இவர்களையும் அந்த பட்டியலில் சேர்த்துக் கொள்ளவும். பிள்ளைகள் சுமையாக கருதியதால் துரத்த படுகின்ற பல முதியவர்களை சென்னையில் பார்க்கக் கூடும். தனிமையால் வாடி மன நோயால் பாதிக்க படுகின்ற அளவிற்குத் துயர் உற்று இருப்பவர்களைப் பற்றி கேள்விப் படும் போதெல்லாம் வருத்தமாக இருக்கும். பின்னாளில் நாமெல்லாம் எப்படி இருப்போமோ என்றுக் கூட தோன்றும். ஆனால் இந்தப் பாட்டிகளை பார்க்கும் போதெல்லாம் ஒரு உத்வேகம் வந்துப் பற்றிக்கொள்ளும். இவர்களுக்கு பின்னாலும் குடும்ப வறுமையும் துரத்தி விட்டப் பிள்ளைகளும் இருக்க கூடும் எனினும் சிங்க நடைப் போடும் இவர்களை விடத் தன்னம்பிக்கைக்கு வேறு எடுத்துக்காட்டுகளும் வேண்டுமோ!