இது என்னுடைய முதல் தமிழ் பதிவு..பெண்மை குறித்து. பெண்ணியம் அல்ல !!!!!!
ஒரு ஐம்பது வருஷத்துக்கு முன்னர் வாழ்ந்த பெண்களுக்கு கல்வி என்ற உரிமை பெரும்பாலும் மறுக்கப்பட்ட்து. அப்படியே தப்பித்தவறி பள்ளிக்கூடம் பக்கம் சென்றுவிட்டாலும், 12ஆம் வகுப்பு முடித்த அடுத்த நிமிடம் திருமணம் செய்து வைத்து விடுவார்கள். மீண்டும் சிறை வாசம் ( சமையலறை) தான். பெண் என்பவள் அடுப்பங்கரை வாசம் மாறாதவளாகவே இருக்க வேண்டும். கோயில்- குளம், சமையலரை இவையே ஒரு பெண்ணுக்கான வரையரைகள்.
அதனால் தான் ஏனோ இன்றளவும் மகளிருக்கான போட்டிகள் என்றால் சமையல், கோலம் இவற்றை தாண்டி யாருமே யோசிப்பதில்லை. ரேடியோ டி.வி யில் கூட சமையல், அழகு சார்ந்த நிகழ்ச்சிகளில் மூச்சுக்கு முன்னூறு தடவை “பெண்களுக்கான, பெண்களுக்கான” என்றே ஏலம் விடுகிறார்கள்.
அப்படி நிகழ்ச்சி நடத்துபவர்கள்
“இது யார் மனதையும் புண்படுத்துவதற்க்கு அல்ல, இவை அனைத்தும் எங்கள் பழங்கால ஆண் ஆதிக்க மனதின் கற்பனையே”
என்பதை இணைத்துக் கொண்டால் என்னை போன்றவர்கள் சண்டைக்கு வராமல் இருப்போம்.நகைக்கடை முதல் முறுக்கு கம்பி வரை எதை விற்கவும் பெண்களின் உடல் பாகங்கள் தேவைப்படுகின்றன. அது ஆண்களுக்கான லுங்கி விளம்பரமாக இருந்தாலும் கூட.
திரைப்படங்களில் “கதாநாயகி” என்பது தொடக்கத்தில் பெயர் போடுவதற்கு மட்டுமே. கதையில் எப்போதும் ஒரு நல்ல தாய், மனைவி, காதலி. இப்படி துணை கதாபாத்திரங்களே.
ஊடகங்களை மட்டும் குறை சொல்வது நியாயம் அல்ல. நம்மை சுற்றி உள்ளவர்கள், ஏன் நாமே நம்மை இழிவு செய்ய தவறுவதில்லை.
நாம் வாழ்வதற்கான சில கட்டுப்பாடுகளை சமூகம் காலம் காலமாக எந்த வித மாற்றமும் இன்றி பின்பற்றி வருகிறது. ஐ. டி கம்பெனி, ஃபாஸ்ட் ஃபுட் என ஃபாஸ்டாக நாடு மாறினாலும் இந்த விதிகளிலிருந்து நாம் ஒரு அங்குலம் விலகி சென்றாலும் குறை சொல்ல உலகமே ஒன்று கூடி விடும். குறை கூறினால் கூட பரவாயில்லை “செவிடன் காதில் ஊதிய சங்கு” என்று நம் வேலையை பார்க்கலாம். ஆனால் இவர்களில் பலரும் பேசுவதோடு விடுவதில்லை. பெண்ணை கேளிக்கை பொருளாகவும், போகப்பொருளாகவும் பார்க்க இந்த நாகரீக விலங்குகளுக்கு எந்த கடவுள் அனுமதி அளித்தது தெரியவில்லை. எனக்கு தெரிந்த கடவுள்கள் எல்லாம் பெண்களுக்கு உதவி செய்ய ஒடோடி வந்தார்கள் தான். கண்ணபிரான் கூட பாஞ்சாலி யின் மானம் காத்தவர் தான்.
ஆனால் இன்று இத்தனை கோடி பெண்களுக்கு எத்தனை கிருஷ்ணர்கள் அவதரிக்க முடியும். அம்மா “துப்பாக்கி”, அம்மா” பெப்பர் ஸ்பிரே” என்று இலவசமாக வழங்கினால் பெண்கள் சுதந்திரமாக சுற்றித்திரிவோம். ஆனால் அரசியல்வாதிகள் எல்லாம் ஏதேனும் அசம்பாவிதம் நிகழ்ந்தால் பேட்டி கொடுக்க மட்டுமே தலைகாட்டும்(ஆட்டும்) பொம்மைகளாக உள்ளனர். பெண்களுக்கு எதிரான வன்முறையில் ஈடுபடுவோருக்கு கடுமையான தண்டனை, தூக்கு தண்டனை என்று ஆர்ப்பாட்டம் செய்கிறோம். வீட்டின் வாசலை கூட தாண்டாமல் ஃபேஸ் புக் இல் “டிபி”(display picture) மாற்றினால் அது பெண் இனத்திற்கே செய்த பேருதவியாக கருதுகின்றனர். இவையும் கூட பத்து பதினைந்து நாட்களுக்கு மட்டுமே. அதற்கு பின் அடுத்த கற்பழிப்பிற்காக காத்திருப்போம். உணவுக்கு தானே “காலாவதி நாள்” மனித உணர்வுகளுக்கு கூடவா?
எத்தனை ஆயிரம் கட்டுரைகள், விவாதங்கள் இந்த தலைப்பில் உள்ளன.ஆனால் இதற்கான் தீர்வு அனைவரும் நினைப்பது போல கடுமையான சட்டங்கள், தண்டனைகள் பிறப்பிப்பதில் இல்லை. அத்தகைய நடவடிக்கை மத்திய கிழக்கு நாடுகளுக்கு சரிப்படும் ஆனால் ஜனநாயக நாடான இந்தியாக்கு தேவை ஒரு சமூக மாற்றம். ஆண் பிள்ளைகள்,பெண் பிள்ளைகள் என்று வீட்டில் பிரித்து வளர்க்காமல் எல்லா வேலையும்
பொதுவானது என்கிற புரிதலை வளர்க்க வேண்டும். ஆண் என்றால் ஒசத்தி என்கிற போக்கை
பெற்றோர் கைவிட்டு நடக்க வேண்டும். பெண்ணின் உணர்வுகளை புரிந்து கொள்கிறவர்களாக பிள்ளைகளை வளர்ப்பதும்,பாலியல் சிக்கல்கள் சார்ந்து நேராகவே பேசுவதும் என்று செய்ய
வேண்டியவை ஏராளம். மாற்றங்கள் நம்மிலிருந்து துவங்க வேண்டும். அரைமணிநேர
பரபரப்புகள் உதவாது
No comments:
Post a Comment